இன்றைய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் முன்னணியிலுள்ள நிறுவனமாகும், மேலும் புவித்தொழில்நுட்ப பொறியியல், மண்சரிவு இடர் முகாமைத்துவம், மனித குடியேற்ற திட்டமிடல், சுற்றாடல் கண்காணிப்பு, கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் செயற்த்திட்ட முகாமைத்துவம் ஆகிய துறைகளிலான தொழில்நுட்ப சேவைகளையும் நிறுவனம் வழங்கி வருகிறது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனமாக தொழிற்பட்டு வருகிறது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நவீன ஆய்வுகூடம் மற்றும் கள உபகரணங்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் அனுபவமிக்க ஊழியர்களை கொண்ட நிறுவனமாகவும் காணப்படுகிறது. 1984ஆம் ஆண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாட்டின் முக்கிய தொழில்நுட்ப சார் சேவைகளை வழங்கும் நிறுவனமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உருவெடுத்துள்ளது. மேலும் நிறுவனம்  உரிய நேரத்தில் வழங்கப்படும் தரமான சேவைகளுக்காக அதன் சேவையுறனர்கள் மத்தியில் பெயர்பெற்றுக் காணப்படுகிறது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு இடர் முகாமைத்துவம் தொடர்பான தேசிய மையமாக விளங்குகின்றது. இதனடிப்படையில் நிறுவனம் மண்சரிவு தொடர்பான ஆய்வுகள், இடர் மதிப்பீடு ஆகியவற்றை மேற்கொள்ளுவதுடன் மண்சரிவு ஆபத்து வலயமாக்கல் தேசப்பட செயற்த்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் மழைவீழ்ச்சியின் போக்கு மற்றும் நிலக்கீழ் அசைவுகள் போன்றவற்றை அவதானித்து மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கையையும் வழங்குகிறது. இவற்றை விட மண்சரிவு தணிப்பு மற்றும் பலமற்ற சாய்வுகளை பலமாக்கல் செயற்த்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் புதிய நிர்மாணம் அல்லது அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதிகளை வழங்கும் முன்னர் குறித்த செயற்த்திட்ட பகுதிகளை ஆராய்ந்து மண்சரிவு இடர் மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குகிறது. மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் புதிய நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான அனுமதியினை பெறுவதற்கு இந்த அறிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுவது அவசியமாகும்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டு மக்கள் தமது வாழும் சூழலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றை தனது பல்துறை இயலுமைகளை கொண்டு பொருத்தமான தீர்வுகளை முன்வைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் நாட்டில் அனர்த்த தாங்குதிறனை மேம்படுத்தவும் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 6 தொழில்நுட்ப பிரிவுகளை கொண்டுள்ளது, அவையாவன; கட்டிட மூலப்பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவு, சுற்றாடல் சேவைகள் மற்றும் கற்கைகள் பிரிவு, புவித்தொழில்நுட்ப பொறியியல் மற்றும் பரிசோதனை பிரிவு, மனித குடியேற்ற திட்டமிடல் மற்றும் பயிற்சி பிரிவு, மண்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவு மற்றும் செயற்த்திட்ட முகாமைத்துவ பிரிவு ஆகியனவாகும். இந்த தொழில்நுட்ப பிரிவுகளுக்கு கூட்டாண்மை பிரிவு, நிகழ்ச்சி திட்ட பிரிவு மற்றும் உள்ளக கணக்காய்வு பிரிவு ஆகியன உதவிகளை வழங்குகின்றன. மேலும் மண்சரிவு ஆபத்துள்ள 10 மாவட்டங்களில் மண்சரிவு இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.