வரலாற்று பின்னணி

1980களில் ஏற்பட்ட துரித அபிவிருத்தி காரணமாக அவை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பரிசோதனை சேவைகளை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது தொடர்பில் அரச துறையில் ஏற்கனவே காணப்பட்ட நிறுவனங்கள் அத்துறையில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தரமானதும் வேகமானதுமான சேவைகளை வழங்கமுடியாதவையாக காணப்பட்டன. இதனால் தரமானதும் வேகமானதுமான சேவைகளை கட்டண ரீதியில் வழங்கும் புதிய நிறுவனமொன்றின் தேவைப்பாட்டின் அவசியம் உணரப்பட்டது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஆய்வுகூடமொன்று தற்போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் காணப்படும் வளாகத்தில் காணப்பட்டது. "தளம் 676 (Site 676)" என அறியப்பட்ட அவ்விடத்தில் கட்டிட மூலப்பொருட்களை பரிசோதனை செய்யக்கூடிய வசதிகள் கொண்ட ஆய்வு கூடமொன்று காணப்பட்டது. பின்னர் இந்த ஆய்வுகூடம் கட்டிட ஆராய்ச்சி நிறுவகமாக (Buildings Research Institute) 1976-78 காலப்பகுதிகளில் மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு காலம் சென்ற வித்தியாஜோதி ஏ.என்.எஸ். குலதுங்க அவர்கள் காரணகர்த்தாவாக விளங்கினார். கொழும்பு கோட்டை பகுதியில் கட்டிட திணைக்களத்திற்கு சொந்தமான மண் பரிசோதனை ஆய்வுகூடமொன்று கலாநிதி. கல்யாண் ரே இன் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வந்தது. இந்த ஆய்வுகூடத்தில் காணப்பட்ட பரிசோதனை உபகரணம் 1983ஆம் ஆண்டில் கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தை உருவாக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டது. சில தடங்கல்களின் பின்னர் 5ஆம் திகதி மார்ச் மாதம் 1984ஆம் ஆண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தனியொரு அமைப்பாக உருவாக்கப்பட்டது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலில் கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் பணியாற்றியுள்ளது. இதன் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டன. இது நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகளிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. இத்தகைய அமைச்சு மாற்றங்களினால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்ட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அவற்றை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு நாட்டின் முக்கிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்ப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது. இச்சந்தர்ப்பங்களில் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டும் அதன் செயற்பாட்டு பரப்பெல்லையை விஸ்தரித்துள்ளது.

கடந்த 32 ஆண்டுகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அதன் இயலுமையை விருத்தி செய்துள்ளதுடன் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிபுணத்துவமிக்க நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளதுடன் பெயர்பெற்ற தொழில்நுட்ப சேவை வழங்குனராகவும் நாட்டில் உருவெடுத்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் புவித்தொழில்நுட்ப பொறியியல், மண்சரிவு கற்கைகள், செயற்த்திட்ட முகாமைத்துவம், மனித குடியேற்ற திட்டமிடல், நீர் தர கண்காணிப்பு, வாயு தர கண்காணிப்பு, கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை ஆகிய செயற்பாடுகளில் விசேட நிபுணத்துவமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 1985இல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு தொடர்பான ஆய்வு மற்றும் சேவை வழங்கும் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அனர்த்த முகாமைத்துவம் சார்ந்த விடயங்களில் நிபுணத்துவமிக்க நிறுவனமாக நாட்டில் பெயர்பெற்றுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 1986 முதல் மண்சரிவு இடர் தொடர்பான ஆய்வு மற்றும் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதுடன் 1992 முதல் மண்சரிவு ஆபத்து வலயமாக்கல் தேசப்பட தயாரிப்பு செயற்த்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அனர்த்த தயார்ப்படுத்துகை திட்டங்களை தயாரிப்பதிலும் 1984 மற்றும் 1992 காலப்பகுதிகளில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான மகாநாட்டினை ஏற்பாடு செய்வதிலும் பெரும் பங்காற்றியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலக்கீழ் பிளவுகள் மற்றும் மண்சரிவு ஆபத்து தணிப்பு செயற்த்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு 2007ஆம் ஆண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டது.

தற்போதைய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

32 ஆண்டுகாலமான அர்ப்பணிப்புடன் கூடிய சேவையின் விளைவாக இன்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் மண்சரிவு இடர் முகாமைத்துவம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் மற்றும் பரிசோதனை ஆகியன தொடர்பில் முக்கிய தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாக விளங்கிவருகிறது. இதன் விளைவாக இன்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலையான நிதிநிலையை கொண்ட முன்னேற்றகரமான அரச நிறுவனமாகவும் விளங்குகிறது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் 350 பணியாளார்களில் 138 பேர் பொறியியல், நிலவியல், விஞ்ஞானம், கட்டிட கலை மற்றும் நகர திட்டமிடல் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்ற நிபுணத்துவமிக்கவராவார்கள். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு இடர்முகாமைத்துவம் தொடர்பான சேவைகளை அதன் தலைமை அலுவலகம் மற்றும் மண்சரிவு ஆபத்துள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள 10 மாவட்ட அலுவலகங்கள் மூலமாக வழங்கிவருகின்றது. மேலும் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவுகள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள், தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் மற்றும் பரிசோதனை சேவைகள் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றன. நிறுவனத்தின் ஆய்வுகூடங்கள் நவீன உபகரணங்களுடன் அதி சிறந்த வசதிகளை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு இடர்முகாமைத்துவம் தொடர்பில் இலங்கையின் தேசுய மையமாக விளங்குகிறது. இதனடிப்படையில் மண்சரிவு தொடர்பான கற்கைகள், ஆய்வுகள், தேசப்படமாக்கல், கண்காணித்தல், முன்னெச்சரிக்கை மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் போன்ற பொறுப்புக்கள் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை விட புதிய நிர்மாணங்களை மேற்கொள்ளும் போதும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் உள்ளூராட்சி சபைகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு இடர் மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்கிவருகிறது. இவற்றை விட சூழல் முகாமைத்துவம், மனித குடியேற்ற திட்டமிடல், பொறியியல் செயற்த்திட்ட முகாமைத்துவ சேவைகள், புவித்தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கட்டிட மூலப்பொருட் பொறியியல் ஆகிய துறைகளிலும் தனது சேவைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது.

மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுயமாக சம்பாதிக்கும் வருமானத்திலேயே பிரதானமாக தங்கியுள்ளது. அரச மற்றும் தனியார் துறைகளுக்கு வழங்கும் ஆலோசனை மற்றும் பரிசோதனை சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே நிறுவனத்தின் வருமானத்தின் பெரும்பங்கு தங்கியுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழிற்பாடுகள்

  • அனர்த்த இடர்க்குறைப்பு மற்றும் பாதுகாப்பான நிர்மாண சூழல் தொடர்பான பிரயோக ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள்.
  • மண்சரிவு மற்றும் நிலவியல் அனர்த்தங்கள் தொடர்பிலான தேசிய மையமாக விளங்குதல்.
  • மாறிவரும் காலநிலை மாற்ற தன்மைகளுக்கேற்பவும் அனர்த்த ஆபத்துள்ள இடங்களில் நிலைத்து நிற்கும் வீடமைப்பு மற்றும் பாதுகாப்பான மனித குடியேற்றங்களின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வழிகாட்டுதலை வழங்கல்.
  • பிரச்சனையான இயல்புகளை கொண்ட மண் படைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்துவது தொடர்பிலான தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்கல்.
  • பாரம்பரிய கட்டிட மூலப்பொருட்களுக்கு பதிலீடான பொருட்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளல்.
  • கட்டிடங்கள், நிர்மாணம், இழப்பு மதிப்பீடுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான தீர்வுகள் போன்றன தொடர்பில் தர மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குதல்.
  • வளவாளர்களின் துணையுடன் தகவல், கல்வி நிகழ்ச்சி திட்டங்கள், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கல்.
  • பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகள் மற்றும் நிலவியல், புவித்தொழில்நுட்ப பொறியியல், கட்டிட மூலப்பொருட்கள், கட்டமைப்பு பொறியியல், செயற்த்திட்ட முகாமைத்துவம், சூழல் முகாமைத்துவம், குடியேற்ற திட்டமிடல் நடவடிக்கைகளை நிறுவன நோக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளல்.
  • பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகள் மற்றும் நிலவியல், புவித்தொழில்நுட்ப பொறியியல், கட்டிட மூலப்பொருட்கள், கட்டமைப்பு பொறியியல், செயற்த்திட்ட முகாமைத்துவம், சூழல் முகாமைத்துவம், குடியேற்ற திட்டமிடல் நடவடிக்கைகளை நிறுவன நோக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளல்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் தலைமையிலான இடைக்கால முகாமைத்துவ குழு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் அதன் செயற்பாடுகளையும் வழிநடாத்தி வருகிறது. மேலும் நிறுவன கூட்டாண்மை திட்டம் மற்றும் வருடாந்த செயற்பாட்டு திட்டம் ஆகியன நிறுவனத்தால் வருடாந்தம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நிறுவன ஆண்டறிக்கைகள் நிறுவன செயற்பாடுகளை மதிப்பிடும் உரிய நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.